மராடி அரசு பள்ளி மீது பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

மராடி அரசு பள்ளி மீது பொய் புகார் அளிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-02-05 21:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி கிருஷ்ணன் (வயது 55) தவழ்ந்த படி வந்தார். அவரிடம் உடனே கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மனுவை பெற்றுக்கொண்டார்.

அவர் அளித்த மனுவில், ஊனமுற்ற நான் அரசு மூலம் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு கஷ்டப்படுகிறேன். எனவே, ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கூடலூர் பாடந்தொரை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வர்ணக்குமாரி (30) அளித்த மனுவில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால், அன்றாட செலவுகளுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். மேலும் பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. ஆகவே, எனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கூடலூர் சேரம்பாடி அருகே உள்ள மராடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணி புரிந்து மாறுதலான ஆசிரியர் ஒருவர் பள்ளியின் மீது சிலரை வைத்து பொய் புகார்கள் அளித்து வருகிறார். இது குறித்து தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அப்பகுதியை சேர்ந்த நாங்கள் ஒரு தனிநபர் உண்மைக்கு புறம்பாக புகார் அளிப்பதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தோம்.

மேலும் அந்த நபரின் தூண்தலின் பேரில் முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு சிலரை வைத்து புகார் அனுப்பி இருந்தார். இந்த புகார் உண்மையில்லை என விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. எனவே, பள்ளி மீது பொய் புகார் அளிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தங்காடு ஓரநள்ளி கிராமத்தை சேர்ந்த தேவகி, பிரேமா ஆகியோர் அளித்த மனுவில், லவ்டேல் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் 11 பேர் சேர்ந்து மகளிர் சுயஉதவிக்குழு கடன் பெற்றிருந்தோம். நாங்கள் 2 பேரும் ரூ.11 ஆயிரம் வீதம் ரூ.22 ஆயிரம் செலுத்தி உள்ளோம். ஆனால் மற்ற 9 பேர் ரூ.6 ஆயிரத்து 500 வீதம் வங்கிக்கு கடன் நிலுவை இல்லை என்று சான்று பெற்று உள்ளனர். ஆனால், நாங்கள் அதிகமாக செலுத்திய ரூ.4 ஆயிரத்து 500-ஐ திருப்பி தரும்படி கேட்டால் வழங்க மறுக்கிறார்கள். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி துணைத்தலைவர் பிரகாஷ் மற்றும் அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பட்டாணி, காளிப்பிளவர், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கு வாடகை தொகை செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

இதற்கு காரணம் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு காய்கறிகள் விற்பனைக்கு வருவதே ஆகும். எனவே, நீலகிரி மாவட்டத்துக்கு வெளியூர் காய்கறிகளை அனுமதிக்காமல், தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்