மத்திய பட்ஜெட் குறித்து அதிருப்தி உத்தவ்தாக்கரேவுடன், சந்திரபாபு நாயுடு டெலிபோனில் பேச்சு

மத்திய பட்ஜெட் குறித்து தனது அதிருப்தியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெலிபோனில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயிடம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-02-04 22:30 GMT
மும்பை,

மத்திய பட்ஜெட் குறித்து தனது அதிருப்தியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெலிபோனில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயிடம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போனில் பேசினார்

மத்திய பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதாவின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவர் தனது அதிருப்தியை டெலிபோன் மூலம் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனித்து போட்டி?

பட்ஜெட்டிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவர் பா.ஜனதா கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக உத்தவ் தாக்கரேயிடம் கூறியுள்ளார்.

மேலும் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு எந்த திட்டங்களும் ஒதுக்கப்படவில்லை. வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக உத்தவ்தாக்கரேயிடம் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்