கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எடியூரப்பா அறிவித்தார்.

Update: 2018-02-04 21:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூருவில் நடைபெற்ற பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:–

மக்கள் படும் துன்பங்களை...


நான் 224 தொகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். மக்கள் படும் துன்பங்களை என்னால் நேரில் அறிந்துகொள்ள முடிந்தது. நான் முதல்–மந்திரியானால் இந்த பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த பயணத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மத்திய அரசிடம் ரூ.1 லட்சம் கோடி நிதி பெற்று நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். இதற்கு பிரதமர் மோடி உதவி செய்வார் என்று நம்புகிறேன்.

இந்த பயணத்தில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மாநில அரசின் தோல்விகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். நான் மேற்கொண்ட பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதில் சிறைக்கு செல்வதை தவிர்க்க லே£க்அயுக்தாவின் அதிகாரத்தை இந்த அரசு பறித்துவிட்டது.

கண்ணீர் வருகிறது

சித்தராமையா தனது மந்திரிகளை பாதுகாக்கவே ஊழல் தடுப்பு படையை உருவாக்கி இருக்கிறார். இந்த ஊழல் தடுப்பு படை ஏற்படுத்தி இருக்காவிட்டால் பல மந்திரிகள் சிறைக்கு சென்று இருப்பார்கள். கர்நாடகத்தில் 3,550 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி செலவு செய்வதாக இந்த அரச சொன்னது. ஆனால் இதுவரை ரூ.8,500 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது.

நாட்டை ஆட்சி செய்வார்

‘நாஸ்ட்ராடாமுஸ்‘ என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் ஒரு பலமான தலைவர் உருவாகி நாட்டை ஆட்சி செய்வார் என்று சொன்னார். அதே போல் மோடி பலமான தலைவராக உருவெடுத்து ஆட்சி செய்து வருகிறார். தொலைநோக்கு பார்வையுடன் செயலாற்றி வருகிறார். அரசியல் சாசனத்தை உருவாக்கி அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. அதனால் தலித் மக்கள் காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்க வேண்டாம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்