ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மைசூரு வருகை 7-ந் தேதி மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மைசூரு வருகிறார். அவர் 7-ந் தேதி சரவணபெலகோலாவில் உள்ள கோமதேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்.

Update: 2018-02-04 21:15 GMT
மைசூரு,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மைசூரு வருகிறார். அவர் 7-ந் தேதி சரவணபெலகோலாவில் உள்ள கோமதேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்.

கோமதேஸ்வரர் கோவில்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 57 அடி உயர பாகுபலி சிலை அமைந்திருக்கிறது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் கழித்து வருகிற 7-ந் தேதி இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா தொடங்குகிறது. 7-ந் தேதி தொடங்கும் இவ்விழா 26-ந் தேதி வரை நடக்கிறது.

இவ்விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வசதிக்காக 12 துணை நகரங்கள் அமைக்கப்படுகின்றன. ஏற்பாடுகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து செய்து வருகிறது. குறிப்பாக இந்த விழாவுக்காக மாநில அரசு ரூ.175 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விழாவின் முக்கிய அம்சமாக முதல்நாளில்(7-ந் தேதி) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

நாளை மைசூரு வருகை

இதற்காக அவர் நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணியளவில் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைகிறார். அப்போது அவருக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, மேயர் பாக்கியவதி, மாவட்ட கலெக்டர் ரன்தீப், மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஸ்வர ராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மைசூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

சாமி தரிசனம் செய்கிறார்


பின்னர் மறுநாளான 7-ந் தேதி காலை 9.15 மணியளவில் மைசூரு லலிதா மகால் பேலசின் பின்பகுதியில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சரவணபெலகோலாவுக்கு செல்கிறார். அங்கு கோமதேஸ்வரர் கோவிலில் நடக்கும் மகா மஸ்தகாபிஷேக விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

விழாவை தொடங்கி வைத்து பல்வேறு பூஜைகளை செய்யும் அவர் பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மீண்டும் மைசூரு லலிதா மகால் பேலஸ் ஹெலிபேட் மைதானத்தை வந்தடைகிறார். அதையடுத்து அங்கிருந்து கார் மூலம் மண்டகள்ளி விமான நிலையத்திற்கு சென்று, தனி விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு


ஜனாதிபதியின் வருகையையொட்டி மைசூரு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, மைசூரு டவுன் உள்ளிட்டவை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்