திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-02-04 21:30 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் ஆத்துப்பாளையம் மற்றும் பூண்டி ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பூண்டி ரிங் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ராமநாத புரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், தற்போது திருப்பூர்-அவினாசி ரோடு பாரதிநகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவர் கஞ்சாவை பதுக்கி காட்டு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது.

மேலும் சங்கர் கொடுத்த தகவலின் பேரில் ஆத்துப்பாளையம் நல்லாறு அருகில் சென்று போலீசார் சோதனை நடத்திய போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (28) என்பவரையும் போலீசார் பிடித்தனர். இதற்கிடையில் போலீசாரை கண்டதும் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்கிற பூனைக்கண்ணன் நாகராஜ் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சங்கர் மற்றும் வேலுசாமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 1 மோட்டார்சைக்கிள், 1 மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கர், வேலுசாமி, நாகராஜ் ஆகியோர் குழுவாக இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்