முத்துப்பேட்டை அருகே தண்ணீரின்றி 800 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது

முத்துப்பேட்டை அருகே கோவிலூரில் தண்ணீரின்றி 800 ஏக்கர் நெற்பயிர்கள் கருகியது. மோட்டார் மூலம் நீரை இறைத்து விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.

Update: 2018-02-04 22:45 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள முத்துப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டு 14 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி தொடங்கிய நாளில் இருந்து மழை, வெள்ளம், வெயில் என மாறி மாறி வந்ததால் நெற்பயிர்கள் அழுகியும், கருகியும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் வெட்டுக்கிளி பயிரை சூறையாடின. இதனையடுத்து 4-வது முறையாக நடவு செய்த பயிர்கள் தற்போது ஒருசிலர் அறுவடை செய்து இருந்தாலும் பல பகுதியில் கதிர் வந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

முத்துப்பேட்டை அருகே கோவிலூர் வடக்காடு பகுதியில் 1,350 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு இந்த பகுதியில் உள்ள பாமணி ஆற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரில் பாசனம் நடைபெற்று வந்தது. தற்போது ஆறு வறண்டு தண்ணீர் இல்லாததால் சுமார் 800 ஏக்கர் நெற்பயிர்கள் கருகிவிட்டன.

மோட்டார் வைத்து இறைத்து வருகின்றனர்

மீதம் உள்ள சுமார் 550 ஏக்கர் நிலத்தில் கதிர் வந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நெற்பயிரை காப்பாற்ற குளம், குட்டை மற்றும் வடிகால் பகுதியில் இருந்து மோட்டார் மூலம் நீரை இறைத்து பாய்ச்சி வருகின் றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

“சம்பா சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு தற்போது சோதனையும், வேதனையும் தான் கிடைக்கிறது. வடிகால் மற்றும் குட்டைகளில் தேங்கியிருந்த நீரை மோட்டார் வைத்து இறைத்து நெற்பயிர்களுக்கு பாய்ச்சும் அவல நிலையில் உள்ளோம். பணம் கொடுத்து டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கியும் தெளித்து விட்டோம். தற்போது இரவு, பகலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயிரை காப்பாற்றி வருகிறோம்” என்றனர்.

மேலும் செய்திகள்