அரசமரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராணிப்பேட்டை அருகே அரசமரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-02-04 22:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அருகே அம்மூர் மேட்டுத்தெருவில் மந்தைவெளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வேப்பமரம் உள்ளது. மந்தைவெளி அம்மனை வழிபட்டு வரும் பக்தர்கள் வேப்பமரத்தையும் வழிபட்டு வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தின் அருகில் திடீரென அரச மரமும் தோன்றியது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேப்பமரத்துடன் அரச மரத்தையும் சேர்த்து வணங்கி வந்தனர்.

கோவிலில் உள்ள அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வைத்தால் உலக மக்கள் அனைவரும் நலமாக இருப்பார்கள். பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள், ஆடு, மாடு, கோழி உள்பட மனிதனுக்கு உதவிடும் ஜீவராசிகள் நோய் நொடியின்றி இருக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறியதையடுத்து இந்த 2 மரத்திற்கும் இப்பகுதி மக்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அம்மூர் மேட்டுத்தெரு பொதுமக்களால் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அம்மூர் பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்து நேற்று காலை 41 சீர்வரிசைகள் பக்தர்களால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் கொண்டு வரப்பட்டது. பின்னர் மந்தைவெளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அரசமரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் மங்கள இசை முழங்க திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அரசமரத்தை ஆணாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் கருதி வேப்பமரத்திற்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்கி மாங்கல்யத்தை வேப்பமரத்திற்கு அணிவித்தனர். இந்த திருமணத்தை இந்த பகுதி மக்களில் ஒரு தரப்பினர் மணமகன் வீட்டாராகவும், மற்றொரு தரப்பினர் பெண் வீட்டாராகவும் இருந்து திருமண சடங்குகளை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர் மணமகன், மணமகள் தரப்பில் மொய் விருந்து நடைபெறுவது போல் இந்த 2 மரங்களுக்கும் நடைபெற்ற திருமணத்திலும் மொய் விருந்து நடைபெற்றது. பக்தர்கள் ஆர்வமுடன் போட்டி போட்டு மொய் எழுதினர். பக்தர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு பரிமாறப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அம்மூர் மேட்டுத்தெரு பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்