கோவில் கும்பாபிஷேக விழாவின் போது தேனீக்கள் கொட்டியதில் 200-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, தேனீக்கள் கொட்டியதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 6 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-04 21:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் கரகம் ஜோடித்து, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

இதையடுத்து கிராமத்தின் அருகே உள்ள கிணற்றுக்கு ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரியை கரைத்துக்கொண்டு இருந்தனர். இதனை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்திருந்தனர்.

அப்போது அந்த கிணற்றின் அருகே உள்ள ஒரு மரத்தில் இருந்த தேன்கூட்டை யாரோ? கலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் கிணற்றின் அருகே குவிந்திருந்தவர்களை சரமாரியாக கொட்ட தொடங்கின. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு ஓடியதால் சிலர் தவறி கீழே விழுந்தனர். எனினும் தேனீக் கள் விரட்டி, விரட்டி கொட்டின. இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்சுகளில் காயமடைந்தவர்களை ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஏராளமானோர் காயமடைந்ததால் அனைவரையும் ஆம்புலன்சுகளில் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் ஆட்டோ, மினி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனீக்கள் கொட்டியதால் வலி தாங்க முடியாமல் பலர் அய்யோ... அம்மா... என்று அலறினர்.

காயமடைந்ததில் நல்லாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது 50), ஜெயபால் (42), கோவிந்தன் (40), ரங்கம்மாள் (35), ராமகிருஷ்ணன் (52), மாரிமுத்து (54) ஆகியோர் மயக்கமடைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் தாலுகா போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிகிச்சை முடிந்து அனைவரும் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்