சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் சிக்கியது பெண் கைது

துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-02-04 23:15 GMT
ஆலந்தூர்,

துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சினேகா ராஜ்குமார் (வயது 36) என்பவர் இறங்கி வந்தார். அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் எதுவும் கிடைக்கவில்லை.

அவர் முழுக்கை சட்டை அணிந்து இருந்ததுடன், கையை சேலையால் மறைத்தபடி இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது கையை சோதனை செய்தனர்.

அதில் அவர், ரூ.24 லட்சம் மதிப்புள்ள 782 கிராம் எடைகொண்ட 9 தங்க வளையல்களை கையில் அணிந்து சேலையால் மறைத்தபடி துபாயில் இருந்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். சினேகாவிடம் இருந்து 9 தங்க வளையல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கமல்ஜித் சிங்(41) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்து இருந்த சட்டையில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 499 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலி மற்றும் ஒரு தங்க காப்பு ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய மதுரையை சேர்ந்த லியாகத்அலிகான்(30) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 276 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் சினேகாவை கைது செய்து செய்த அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்