நாகர்கோவிலில் பரிதாபம்: மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

நாகர்கோவிலில் மின் கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். இதே போல் மற்றொரு விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-02-04 23:00 GMT
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் பெருங்குடி வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவர் நேற்று காலை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து பழையாற்று கரையோரம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் ராஜேஷ் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இச்சம்பவம் பற்றி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்சு வருவதற்குள் ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜேஷ் இறந்தது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் வைத்திருந்த ராஜேசின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

இதே போல் மற்றொரு விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். அதாவது மேலபுத்தேரியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (70). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றியும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்