சைவ–வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம்

சைவ–வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது.

Update: 2018-02-04 22:30 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவை சுற்றி திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருப்பன்றி கோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் உள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.

இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் “கோபாலா... கோபாலா... கோவிந்தா...’’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கி.மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள். இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் வருகிற 12–ந் தேதி தொடங்கி 13–ந்தேதி முடிவடைகிறது.

இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வருகிற 7–ந் தேதி (புதன்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள்.

சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2 விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அவற்றில் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

பாண்டவர்களில் முதல்வரான தர்மபுத்திரனின் ராஜகுரு வியாச மகரிசி யாகம் ஒன்றை நிறைவேற்ற புரு‌ஷ மிருகத்தின் பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாச மகரிசிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்த மகா விஷ்ணு, பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.

அத்துடன் 12 உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புரு‌ஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தார். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புரு‌ஷமிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை அது கோபத்துடன் துரத்தி சென்று  பிடித்துக்கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் சிவலிங்கம் உருவாகியது. புரு‌ஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.

சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புரு‌ஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பீமனை பற்றிக்கொள்ள அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு விட்டு ஓடி விட்டார். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவதலங்களை உருவாக்கி விடுகிறது. 12–வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாச மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புரு‌ஷமிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புரு‌ஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புரு‌ஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புரு‌ஷமிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு பீமன் ஓடியதை நினைவு கூறும் வகையில், இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

குண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன் நான் யாருடைய தலையை தொட்டாலும் அவர் சாம்பலாகி விட வேண்டும்‘ என்ற வரத்தை கேட்டான்.

சிவனும் அந்த வரத்தை கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொட முயன்றான். உடனே சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்றவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக மற்றொரு கதை கூறுகிறது.

மேலும் செய்திகள்