உஷாரய்யா உஷாரு..

அவருக்கு வயது 36. பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். விலைஉயர்ந்த பைக்கை வாங்குவது- அதை தினமும் இருமுறை துடைத்து சுத்தம் செய்வது- அதில் பயணிப்பது போன்றவை அவர் விரும்பிச் செய்யும் விஷயங்கள். அதுபோல் உயர்ந்த ரக நாயையும் வாங்கி வளர்ப்பார். வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம் அவர் அந்த நாயோடு கொஞ்சி மகிழ்வார்.

Update: 2018-02-04 10:30 GMT
வீட்டு காம்பவுண்ட்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது சொகுசு பைக் திடீரென்று எரிந்து நாசமானது. அதுவும் அவர் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது வெளியே பைக்குக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. போலீசில் புகார் கொடுத்துவிட்டு, மீண்டும் அதுபோல் விலை உயர்ந்த இன்னொரு பைக்கை வாங்கினார். அடுத்த சில நாட்களில் அவர் செல்லமாக வளர்த்த நாயை காணவில்லை. அவர் எங்கெங்கோ தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து குற்றுயிராக அது வீட்டின் முன்னால் உள்ள சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பின்பு இறந்துபோனது.

பாசத்தை பொழிந்த நாயின் மரணம் அவருக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. அதில் இருந்து அவர் மீள்வதற்கு முன்னால், மீண்டும் புது பைக் தீவைக்கப்பட்டு இருக்கையும், பின்பக்க டயரும் எரிந்து நாசமானது. மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் அக்கம்பக்கம் விசாரித்தனர். அது ஓரளவு வசதிபடைத்தவர்கள் வாழ்கிற பகுதி. அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இதுவரை அந்த பகுதியில் நடந்ததில்லை. இந்த நபரும் வம்பு தும்புகளுக்கு போகாதவர். அந்த பகுதி மக்கள் அனைவரும் அவரை நல்லவர் என்றனர். அவரும் தனக்கு எதிரிகள் யாரும் கிடையாது என்றார்.

அவருக்கு வயது 36 என்றாலும், திருமணமாகி நான்கு மாதங்களே ஆகியிருந்தன. அந்த புதுப்பெண்ணுக்கும்- அவருக்கும் பத்து வயது வித்தியாசம் இருந்தது. போலீஸ் விசாரணை எதிலும் அந்த இளம் பெண் ஆர்வம் காட்டவில்லை. ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறி நழுவிக் கொண்டே இருந்தாள். போலீசாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரோ தனக்கு தெரிந்த பிரபலங்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, குற்றவாளியை சீக்கிரம் கண்டுபிடியுங்கள் என்று போலீசாரை கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்று மதியம் திடீரென்று, அந்த வீட்டிற்கு சென்றார். கணவர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு சென்ற அவர், அந்த புதுப்பெண்ணிடம் ‘நாயை அடித்துக் கொன்றதும், இரண்டு முறை பைக்குக்கு தீவைத்ததும் நீதான் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கான ஆதாரங்களை எல்லாம் சேகரித்து விட்டோம். நீயாக உண்மையை ஒத்துக்கொண்டால் உனக்கு சாதகமாக நடந்து கொள்வோம். இல்லாவிட்டால் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று அவர் சொன்னதும், அவள் உடல் நடுங்கியது. உளறலோடு குற்றத்தை ஒத்துக்கொண்டாள்.

‘என் கணவர் விசித்திரமான சுபாவம் கொண்டவர். திருமணம் வேண்டாம் என்று கூறிக்கொண்டு தனியாக வாழ்ந்த அவரை கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். அவர் தினமும் வேலையில் இருந்து வீடு திரும்பிய நேரம் முதல், நாயோடு கொஞ்சத் தொடங்குவார். அவருக்கு பேச்சு, துணை, தூக்கம் எல்லாம் அதோடுதான். விலை உயர்ந்த பைக்கை வாங்கிவைத்துக்கொண்டு இரவும் பகலும் அதை துடைத்துக்கொண்டே இருப்பார். இதெல்லாம் முடிந்து இரவு தாமதமாக படுக்கைக்கு வந்தாலும் செல்போனில் மூழ்கிவிடுவார். அவருக்கு தாம்பத்யத்தில் விருப்பமே இல்லை. அதை தவிர்க்கவே நாயையும், பைக்கையும் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவர் மீது என் கோபத்தைக்காட்ட முடியவில்லை. அதனால் அவர் மீதான ஆத்திரத்தை எல்லாம் சேர்த்துவைத்துக்கொண்டு அவர் அளவுக்கு அதிகமாக பாசம்காட்டிய நாயை அடித்துக் கொன்றேன். அதே ஆத்திரத்தில்தான் பைக்கிற்கும் தீவைத்தேன். இதெல்லாம் என் கணவருக்கு தெரியவேண்டாம். பெண் மீது ஆசையே இல்லாத அவர், இவைகளை காரணங்காட்டி என்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்’ என்று கண்ணீர்விட்டிருக்கிறாள்.

‘ஆர்வம்’ இல்லாத கணவர் மீது பெண்கள் எப்படி ஆத்திரத்தை கொட்டுறாங்கங்கிறதை தெரிஞ்சுக்குங்க..!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்