பூட்டி கிடக்கும் வீடுகளில் பூஜை செய்து கொள்ளையடிக்கும் 4 பேர் கும்பல் கைது

பூட்டி கிடக்கும் வீடுகளில் பூஜை செய்து கொள்ளையடிக்கும் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-03 22:30 GMT
மும்பை,

பூட்டி கிடக்கும் வீடுகளில் பூஜை செய்து கொள்ளையடிக்கும் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

4 பேர் கைது

மும்பை நவ்கர் பகுதியில் சந்தேகம் படும்படியாக சிலர் சுற்றி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அங்குள்ள செக்நாக்கா பகுதியில் 7 பேர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கவனித்த போலீசார் அவர்களை நோக்கி சென்றனர்.

இதை கண்டதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

3 பேருக்கு வலைவீச்சு

பிடிபட்டவர்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்த 4 கத்திகள், 4 கள்ளச்சாவிகள், ஸ்குரு டிரைவர்கள், தேங்காய், குங்குமம், பூக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் மோகன் (வயது25), சக்திவேல் நிர்மல் (41), பிரவின் பீம்ராவ் (25), யஷ்வந்த் பபன் மோகிதே (20) என்பதும், இவர்கள் முல்லுண்டு, தானே, டோம்பிவிலி, கல்யாண், நவிமும்பை பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் தேங்காய், குங்குமம், பூக்கள் எதற்காக வைத்திருக்கிறீர்கள் என கேட்டதற்கு, கொள்ளையடிக்க செல்லும் வீடுகளுக்கு புகுந்ததும் அங்கு பூஜை செய்த பின்னர் தான் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவோம் என்றனர். தற்போது நவ்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் வந்து போது போலீசில் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

தலைமறைவான அவர்களது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்