ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

தண்ணீர்பள்ளி காவிரி ஆற்று பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-03 22:45 GMT
குளித்தலை,

தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடக்கோரி குளித்தலை, தண்ணீர்பள்ளி, பரளி, கருங்கலாப்பள்ளி, மருதூர், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தற்போது குளித்தலை மற்றும் இதை சுற்றியுள்ள பகுதியில் நெற்பயிர் நன்கு வளர்ந்து கதிர்விடும் தருவாயிலும், அறுவடை செய்யும் நிலையிலும் உள்ளது. தற்போது தென்கரை வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளதால், இப்பயிர்களை காப்பாற்றமுடியாது எனவே மாயனூர் தடுப்பணையில் தேக்கிவைக்கப்பட்டுள்ள தண்ணீரை திறந்துவிடவேண்டும். மேலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசிடம் தெரிவித்து தண்ணீர் பெற்று கட்டளை மற்றும் தென்கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தோம். மாயனூர் தடுப்பணையில் உள்ள தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றனர்.

பின்னர் இந்த அலுவலகத்தைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் மருதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் தலைமையில், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள சாந்திவனம் செல்லும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு ஆற்றில் ஆழ்குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் பணியை நிறுத்துமாறு தெரிவித்து ஆழ்குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அரசு தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்காமல் தண்ணீர்பள்ளி பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதற்காக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஏற்கனவே போதிய தண்ணீர் இல்லாமல் இப்பகுதியில் உள்ள தென்னை, மா, பனை போன்ற மரங்கள் காய்ந்துவிட்டன. இந்த நிலையில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டால் தண்ணீரின்றி இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது. இதை மீறி பணிமேற்கொண்டால் பொதுமக்கள் சார்பில் தடுக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் ஆழ்குழாய் அமைக் கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் பணியை நிறுத்துமாறு கூறிச்சென்றனர். இதையடுத்து ஆழ்குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆழ்குழாய் அமைப்பது குறித்து அங்கு பணி மேற்கொண்டவர்களிடம் விசாரித்தபோது,

குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களை சார்ந்த 253 கிராம குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றுப்பகுதியில் நீர்மட்டத்தின் அளவை பரிசோதனை செய்யும் பொருட்டு தற்காலிகமாக ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்