அமராவதி வனப்பகுதியில் உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் ஒற்றை யானை

அமராவதி வனப்பகுதியில் உடுமலை-மூணாறு சாலையில் ஒற்றை யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Update: 2018-02-03 22:00 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள், புலி, சிறுத்தை, செந்நாய்கள், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, காட்டெருமைகள், கரடி, கருமந்தி என்று ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சிற்றாறுகள், ஓடைகள், வனக்குட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன. மேலும் வனத்துறையின் மூலம் ஆங்காங்கே தடுப்பணைகள், மற்றும் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

ஆனாலும் வறட்சி காலங்களில் வனவிலங்குகள் தாகத்தை தீர்க்க அமராவதி அணையை தேடிவருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையை கடந்து செல்கிறது. தற்போது வனப்பகுதியில் ஓரளவு தண்ணீர் இருக்கும் நிலையில், கொசுக்கடி காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும், வனப்பகுதியில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சமவெளிப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

குறிப்பாக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக அமராவதி அணை பகுதிக்கு வரும். தற்போது உடுமலை-மூணாறு சாலையில் உள்ள கருவேல மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன. யானைகளுக்கு இவை பிடித்தமான உணவு என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம், கூட்டமாக வரும் யானைகள் சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்களில் உள்ள காய்களை உண்டு மகிழ்ந்து வருகின்றன.

இவ்வாறு சாலையோரம் யானைகள் அதிக அளவில் நிற்கும்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படம் எடுப்பதும், சீண்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யானைகள் கோபமடைந்து வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக உடுமலை-மூணாறு சாலையில் அமராவதி வனப்பகுதியில் ஒற்றையானை ஒன்று உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

உடுமலை-மூணாறு சாலையில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சோதனைச்சாவடிகளில் உள்ள வனத்துறை ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவது வனவிலங்குகளை சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

யானைகளை சீண்டும் போது, அவை வாகன ஓட்டிகளை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது இந்த பகுதியில் ஒற்றை ஆண்யானை ஒன்று உலா வருகிறது. பொதுவாக யானைகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை.

சில நேரத்தில் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றிவரும் யானைகள் சற்று மூர்க்கத்தனத்துடன் காணப்படும். அவ்வாறு தனியாக நிற்கும் யானை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும். எனவே உடுமலை-மூணாறு சாலையில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்.

ஒற்றை யானையையோ, யானைகள் கூட்டத்தையோ சாலையில் பார்க்க நேர்ந்தால், யானைகள் கடந்து செல்லும் வரை, வாகனங்களை நிறுத்திவிட்டு அமைதியாக இருக்கவேண்டும். வாகனங்களில் ஒலி எழுப்புவதோ, இரவு நேரங்களில் பிரகாசமான விளக்குகளை எரியச்செய்வதோ யானைகளை கோபமடையச்செய்யும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். இவ்வாறு வனத்துறையினர் கூறினார்கள். 

மேலும் செய்திகள்