மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை குஷ்பு பேட்டி

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை என்று குஷ்பு கூறினார்.

Update: 2018-02-02 20:45 GMT
தூத்துக்குடி,

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு சாதகமாக இல்லை என்று குஷ்பு கூறினார்.

பேட்டி

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதகமாக இல்லை

மத்திய பட்ஜெட் சராசரி மக்கள் வாழ்வதற்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்கவில்லை. ரெயில்வே பட்ஜெட்டிலும் எந்த வித்தியாசமும் இல்லை. கர்நாடகத்தில் தேர்தல் வரவுள்ளது. இதனால் அந்த பகுதியில் ரெயில்வேக்கு ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ஒரு துளி கூட சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த வசதியும் செய்ததாக தெரியவில்லை.

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது. இடைத்தேர்தல் முடிவு வரும் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்தால், மக்களை திசை திருப்பிவிடலாம் என்று நினைத்து அன்றைய தினத்தில் தாக்கல் செய்து உள்ளனர். ஆனால் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது பா.ஜனதாவின் கடைசி பட்ஜெட்டாகவே அமையும். அருண் ஜெட்லி பொருளாதார மேதை இல்லை. அவர் ஒரு வக்கீல். பொருளாதாரம் தெரிந்தவர்கள்தான் சிறப்பான பட்ஜெட்டை கொடுக்க முடியும். பட்ஜெட்டில் எந்த வகையிலும் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த திட்டங்களையே பெயர் மாற்றி, மாற்றி கொண்டு வருகிறார்கள்.

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு


பா.ஜனதாவில் பல்வேறு ஊழல்கள் உள்ளன. நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. மக்கள் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் அதிகரித்தால்தான் அவர்கள் வீட்டில் சமையல் நடக்கும் என்பது இல்லை.

வேலைநிறுத்தத்தில் பஸ் ஊழியர்களுக்கு ஒருவாரம் சம்பளம் பிடித்தம் செய்து உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் சட்டசபைக்கு செல்கிறார்களா? அவர்கள் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்வது இல்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நாற்காலியை பாதுகாக்க, பட்ஜெட்டை பாராட்டி உள்ளார்.

அவசியம் இல்லை

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சட்டை அணிந்ததற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலானவர்கள் பணக்காரர்களாக தான் உள்ளனர். காமராஜர் எளிமையாக இருந்தார். அதனால்தான் அவர் புகழை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் அவரை போல் எளிமையாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்