பயணிகளுக்கு சில்லரை வழங்க முடியவில்லை என கண்டக்டர்கள் புலம்பல்

அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு: பயணிகளுக்கு சில்லரை வழங்க முடியவில்லை என்று அரசு பஸ் கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.

Update: 2018-02-01 22:06 GMT
திண்டுக்கல்,

தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனால் 20 முதல் 54 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்ந்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை அரசு குறைத்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பயணிகளுக்கு சில்லரை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக அரசு பஸ் கண்டக்டர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, தமிழக அரசு தற்போது பஸ் கட்டணத்தை மாற்றியது. அதன்படி கிலோமீட்டரை பொறுத்து அனைத்து பஸ் நிறுத்தங்களுக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு கட்டணம் என்று இருந்தது.

இது தற்போது மாற்றப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சில்லரை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. கட்டணம் உயர்ந்துள்ளதால் தற்போது பெரும்பாலான பயணிகள் ரூ.50, ரூ.100 என்று தான் கொடுக்கின்றனர். அனைவரும் இப்படி கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில்லரை வழங்க முடிவதில்லை. இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்