வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-02-01 21:57 GMT
திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு ‘அம்மா இருசக்கர வாகனம்’ வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்தார். அதன்படி ஸ்கூட்டரின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். இதையடுத்து அந்த திட்டத்தின்படி வேலைக்கு செல்லும் மற்றும் சிறு தொழில் செய்யும் பெண்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி முதல், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நாடி பெண்கள் செல்கின்றனர். இந்தநிலையில் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே இருப்பதால், நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்தனர்.

பெரும்பாலான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள மரத்தடியில் பெண்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் விண்ணப்பித்தனர்.

மேலும் செய்திகள்