தாண்டிக்குடி பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

தாண்டிக்குடி பகுதியில் தோட்டத்தில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்தியது.

Update: 2018-02-01 21:52 GMT
பெரும்பாறை,

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துகால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தோட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை அவை சேதப்படுத்தி விடுகின்றன. பின்னர் தோட்டங்களுக்குள் புகுந்து காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை தாக்கியதில் பெண் ஒருவர் இறந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் 4 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் தாண்டிக்குடி பகுதியில் 4 காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, காபி, கூந்தபனை மரம் ஆகியவற்றை நாசமாக்கின. பின்னர் அந்த தோட்டத்தில் இருந்த 3 வீடுகளை சேதப்படுத்தின. அப்போது அந்த வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாண்டிக்குடி பகுதியில் பெருங்கானல், வழிகாளியம் கோவில், அழிஞ்சோடை ஆகிய இடங்களில் தோட்டங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்தன. அங்கு இருந்த பயிர்களை நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

இந்த பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். எனவே தாண்டிக்குடி பகுதியில் காட்டுயானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்