கடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-01 23:00 GMT
கடலூர்,

கடலூர் முதுநகரில் குட்டைக்கார பள்ளத்தெரு உள்ளது. இந்த தெருவில் 25 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாகவும், இதனால் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிய வசதியின்றி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆகவே ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று நகராட்சி அலுவலகத்தில் இருந்து அனைவருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நோட்டீசை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழங்கி விட்டு வீடுகளை உடனடியாக காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீர் நிலை புறம்போக்கில் நாங்கள் வசிக்கவில்லை. ஆகவே நாங்கள் வீடுகளை காலி செய்யமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர் செந்தில் தலைமையில் நேற்று கடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர் களை ஆணையாளர் முஜிபுர்ரகுமான் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்