இந்தியா முழுவதும் 34 வழக்கு: கொள்ளை கும்பல் தலைவன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

கோவை ஏ.டி.எம். கொள்ளையன் இஸ்லாமுதீன் மீது இந்தியா முழுவதும் 34 வழக்குகள். எனவே அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-02-01 23:30 GMT
கோவை,

கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமுதீன் உள்பட அவரது கூட்டாளிகள் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 34 வழக்குகள் பதிவாகி உள்ளன. இஸ்லாமுதீன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சில மாநிலங்களில் ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், சில மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டு இருந்தார். இஸ்லாமுதீன் மீது கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

இஸ்லாமுதீனின் கொள்ளை கும்பலில் 15 பேருக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரியானா மாநிலம் மேவாட் என்ற பகுதியை சேர்ந்த பயங்கர கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் எப்போதும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தான் சுற்றி வருவார்கள். தங்களை சாதாரணமானவர்கள் எதிர்த்தாலும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் துப்பாக்கியால் சுடக்கூடிய மனோபாவம் உள்ளவர்கள். அந்த கும்பலை போலீசார் பலமுறை சுற்றி வளைத்தாலும் அவர்களை துப்பாக்கியால் சுட்டும் கற்கள் வீசியும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்று விடக்கூடியவர்கள்.


இந்த கும்பலின் நடமாட்டத்தை டெல்லி போலீசார் 6 மாதங்களாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 25.7.2016 அன்று மாலை கொள்ளை கும்பல் தலைவன் இஸ்லாமுதீன் டெல்லி அருகே உள்ள நாங்கோலி மெட்ரோ போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு வருவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் இஸ்லாமுதீன் மற்றும் அவரது கூட்டாளிகளை சுற்றி வளைக்க முயன்றபோது இஸ்லாமுதீன் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டான். அதிர்ஷ்டவசமாக போலீசார் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.

இந்த கொள்ளை கும்பல் கடந்த 30.6.2016 அன்று அரியானா மாநிலம் கூர்கான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை சீருடையில் இருக்கும்போதே அவரது காருடன் கடத்தி சென்று அவரை தாக்கியுள்ளனர். அதன்பின்னர் அவரிடமிருந்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து அதைக் கொண்டு பணத்தை எடுத்து இன்ஸ்பெக்டரை அனாதையாக இறக்கி விட்டு காருடன் தப்பிச் சென்றனர்.

இந்த பயங்கர கொள்ளை கும்பலுக்கு இஸ்லாமுதீன்தான் தலைவனாக செயல்பட்டு உள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக இவரது தலைமையிலான கொள்ளை கும்பல் பல கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது வடமாநில போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு உள்பட 34 வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் பதிவாகி உள்ளன.

இந்த கொள்ளை கும்பல் வடமாநிலங்களில் செம்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து கொள்ளையடித்து உள்ளனர். அந்த லாரிகளை கடத்தியதும் அதில் உள்ள ஜி.பி.எஸ். கருவியை அகற்றி விடுவார்கள். அதன்பின்னர் அந்த லாரி டிரைவர் மற்றும் கிளனர் ஆகியோருடன் லாரியை கடத்திச் சென்று வேறு மாநிலத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்று விடுவார்கள். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட சில பழைய இரும்பு கடைகளை தொடர்ந்து திருட்டு செம்பு விற்றுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்பட வட மாநிலங்களில் லட்சக்கணக்கான ரூபாயுடன் காரில் செல்பவர்களை குறிவைத்து அவர்களை கடத்திச் சென்று பணத்தையும், காரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விடுவார்கள். அந்த கார்களை மற்ற குற்றச் செயல்களுக்கு இந்த கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.

அதன்படி தான் கோவையில் ஏ.டி.எம். களை உடைப்பதற்கு கொள்ளையர்கள் ராஜஸ்தான், அரியானா ஆகிய பதிவு எண்கள் கொண்ட கார்கள் மற்றும் லாரியில் வந்துள்ளனர். அந்த வாகனங்கள் அனைத்தும் திருடப்பட்ட வாகனங்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கைதான இஸ்லாமுதீனை கோவை அழைத்து வந்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இவ்வாறு தனிப்படை போலீசார் கூறினார்கள்.

மேலும் செய்திகள்