ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியபோது மாடு முட்டியதில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-02-01 22:15 GMT
தம்மம்பட்டி,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள நாகியம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. உள்ளுர் போலீசாரிடம் மட்டும் அனுமதி பெற்று நாகியம்பட்டி நாட்டுக்கல் வீதியில் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 380 காளைகள் அழைத்து வரப்பட்டன. 400 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர்.

இதை காண தம்மம்பட்டி, கெங்கவல்லி, பெரம்பலூர், துறையூர், திருச்சி, ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 25 பேர் காயம் அடைந்து தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இதில் திருச்சி மாவட்டம் நாகநல்லூர் தெற்குதெரு ஜோதிநகரைச் சேர்ந்த சூரியன் (வயது 25) என்பவர் பலியானார்.

10 பேர் மீது வழக்கு

சூரியனின் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தம்மம்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனுமதியின்றி நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தியது குறித்து நாகியம்பட்டி கிராம நிர்வாக (பொறுப்பு) அலுவலர் அசோக்குமார் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்பேரில் நாகியம்பட்டி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு உள்பட 10 பேர் மீது தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்