கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

அன்னவாசல் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்தது. அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-01 23:00 GMT
நார்த்தாமலை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் சாலையில் தங்கவேல் மனைவி எழுவி என்பவருக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய வயல் ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இது பற்றி இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடதுக்கு வந்த நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, பிணத்தை கட்டில் கட்டி மேலே கொண்டு வந்தனர். இதற் கிடையில் கிணற்றில் பிணம் மிதந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

கொலையா?

கிணற்றில் பிணமாக மிதந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் ஊதா நிற கைலியும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் கிராம நிர்வாக அதிகாரி ரவி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை மர்மநபர்கள் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்