நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ராஜாக்கமங்கலம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-02-01 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் வடக்கு கண்ணக்குறிச்சியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராபின்சன். தொழிலாளி. இவருடைய மனைவி சுதா(வயது 42). இவர் சம்பவத்தன்று நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் இரவு வீடுதிரும்புவதற்காக கணபதிபுரம் அருகே பஸ்சை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 நபர்கள் சுதாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா சங்கிலியை இருக்கி பிடித்துக் கொண்டு சிறிதுநேரம் கொள்ளையர்களிடம் போராடினார்.

இதில் சங்கிலி அறுந்து 1½ பவுன் டாலர் கீழே விழுந்தது. கொள்ளையர்கள் கையில் 9½ பவுன் நகை சிக்கிக்கொண்டது. அந்த நகையுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், சுதா கீழே விழுந்த 1½ பவுன் டாலரை எடுத்துக்கொண்டு ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். மேலும், சுதாவிடம் கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து போலீசார் கேட்டறிந்தனர்.

அப்போது நகைப்பறிப்பில் ஈடுபட்டது கண்ணக்குறிச்சி அறப்புறையை சேர்ந்த பாபு, ஆறுதெங்கன்விளையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்