மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி போலீசார் விசாரணை

திருமானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-01 01:15 GMT
திருமானூர்,

தஞ்சை மாவட்டம், மேலபுனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவரது உறவினர் கண்டியூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (68). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே தாத்தமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கேண்டீன் வைத்துள்ள சாமிநாதன் மகனை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

2 பேர் பலி

கல்லூர் பிரிவு பாதை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாமிநாதன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமிநாதன், கோபாலகிருஷ்ணன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்