சேலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு: தியேட்டரில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 பேர் கைது

சேலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரில் மண்எண்ணெய் குண்டு வீசிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-01 00:30 GMT
சேலம்,

சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று, வட மாநிலங் களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் பல்வேறு கட்ட போராட்டங் களையும் கடந்து, பத்மாவத் திரைப்படம் ஒரு சில மாநிலங்களை தவிர தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த வாரம் வெளியானது.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் பத்மாவத் படம் திரையிடப் படுவதாக இருந்தது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள், பீர் பாட்டிலில் மண்எண்ணெய் நிரப்பி அதை தியேட்டரில் வீசினர். அது தியேட்டரின் முன்பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

3 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுசிங் (வயது 45), கோபால்சிங் (30), மகேந்திரசிங் (30) என்பதும், இவர்கள் தற்போது சேலத்தில் உள்ள வீரபாண்டி நகரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதும், பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரில் மண்எண்ணெய் குண்டு வீசியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று பாபுசிங், கோபால்சிங், மகேந்திரசிங் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்