குடோனில் பதுக்கி வைத்திருந்த 469 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த 469 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு வாலிபர் ஒருவரையும் கைது செய்தனர்.

Update: 2018-02-01 01:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மது விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஒரு குடோனில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நேற்று கிருஷ்ணன் கோவில் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டுக்கு அருகே உள்ள குடோனில் சில பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதை திறந்து பார்த்தபோது பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 469 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்பிறகு மதுபாட்டில்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தது யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 30) என்பவர் தான் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி  குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனே சிவாவை பிடித்து, வடசேரி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்