மனித நேயம் இல்லை என்றால் எந்த தொழிலும் வெற்றி பெறாது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

மனிதநேயம் இல்லை என்றால் எந்த தொழிலும் வெற்றி பெற முடியாது என்று தஞ்சையில் நடந்த விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Update: 2018-01-30 22:45 GMT
தஞ்சாவூர்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மனிதநேய வார நிறைவு விழா தஞ்சையில் உள்ள ராஜராஜன் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி வரவேற்றார்.

விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான அடிப்படை மனிதநேயம் தான். மனிதநேயம் இல்லையென்றால் எந்த தொழிலும் வெற்றிபெறாது. மகாத்மாகாந்தி மனித நேயத்துடன் செயல்பட்டு நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தார். அந்த சுதந்திரத்தை பேணி காக்கும் வகையில் சட்டத்தை வகுத்து கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

மனிதநேயத்துடன் வாழ்வது அவசியம்

இனம், மொழி, சாதி, நாடு, இவற்றையெல்லாம் தாண்டி திகழ்வது தான் மனித நேயம். ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையிலும் இருந்தாலும், மனித நேயத்துடன் வாழ்வது அவசியம். மாணவ, மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் எப்படி இருந்தது. தற்பொழுது 20 ஆண்டு கால வளர்ச்சியில் உலக வல்லரசு நாடுகளிலேயே போட்டி போடக்கூடிய அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால்வள தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், நிக்கல்சன் வங்கி இயக்குனர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், கோவிந்தராஜ், தாசில்தார் தங்கபிரபாகரன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் தமிழ்ஜெயந்தி, ஆதிதிராவிட நல குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்