மூதாட்டி கொலை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்பாக கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Update: 2018-01-30 23:00 GMT
வேலூர்,

பேரணாம்பட்டு, புதுமனை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் தசரதன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி தனது மனைவி தீபா மீதான நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார். அப்போது தீபாவின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் மனோகரன் அங்கு ஓடி வந்து தசரதனை தடுக்க முயன்றனர்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த தசரதன் கண்மூடித்தனமாக கத்தியால் செல்வராஜின் முகம் மற்றும் தலையில் வெட்டினார். மேலும் மனோகரனையும் கத்தியால் வெட்டி அவரின் மர்மஉறுப்பையும் அறுத்தார்.

அப்போது அங்கு எதிர்பாராத விதமாக ஓடி வந்த பக்கத்து வீட்டு சிறுவன் நிர்மலையும் (4) அவர் கத்தியால் வெட்டினார். இதைப்பார்த்தும் நிர்மலின் பாட்டி சரோஜா அங்கு ஓடி வந்து நிர்மலை காப்பாற்ற முயன்றார். இதில் சரோஜாவை அவர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்த தசரதனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் அரசு வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன், தசரதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில் ஆயுள் தண்டனை மற்றும் 2 பிரிவுகளின் கீழ் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அதில், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையாக 14 ஆண்டுகளும், 4 பேரை கொலை செய்ய முயன்றதால் 5 ஆண்டுகளும் (5 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்), கொலை மிரட்டல் விடுத்ததால் ஒரு ஆண்டும் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்