கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க கோரி கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கடந்த 8 மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் சேர்ந்து இந்த திட்டத்தை முடக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆகவே இந்த திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கி அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 500–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் துரைராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகள் பற்றி பேசினார்.
ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், மாவட்டக்குழு கோதண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர்கள் பக்கிரி, வளர்மதி, துணை தலைவர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைவருக்கும் வேலை அளிக்கும் வகையில் வேலை திட்டங்களை உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் வீரக்கண்ணு, மீனாட்சி, கோவிந்தம்மாள், ராஜலட்சுமி, மாரியம்மாள், அரசன், பாவாடைசாமி, நடராஜன், அஞ்சலை, விசாலாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதியிடம் வழங்கினர். மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.