மகதாயி நதி படுகையில் கர்நாடகம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை சித்தராமையா பேட்டி

மகதாயி நதி படுகையில் கர்நாடகம் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்றும், சண்டைக்கு வருவதே கோவாவின் வேலை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2018-01-30 21:00 GMT
பெங்களூரு,

மகதாயி நதி படுகையில் கர்நாடகம் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்றும், சண்டைக்கு வருவதே கோவாவின் வேலை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

சண்டைக்கு வருவதே...


மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகதாயி நதி படுகையில் கர்நாடக அரசு எந்தவித விதிமீறலிலும் ஈடுபடவில்லை. ஒருவேளை மாநில அரசு ஏதாவது விதிகளை மீறி இருந்தால் அதுபற்றி நடுவர் மன்றம் முடிவு எடுக்கட்டும். கோவா மாநில துணை சபாநாயகர் சொல்கிறபடி முடிவு ஏற்படாது. சண்டைக்கு வருவதே கோவாவின் வேலை. எங்கள் தண்ணீரை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டால் அவர்கள் கலாட்டா செய்கிறார்கள். என்ன செய்வது?.

பிரச்சினை செய்வதையே...

மகதாயி நதியில் 45 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது. 200 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்தாலும், அதை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. குடிநீருக்கு 7.5 டி.எம்.சி. தாருங்கள் என்று கேட்டால் அதற்கு கோவா மாநிலத்தினர் பிரச்சினை செய்கிறார்கள்.

கர்நாடகத்திற்குள் கோவாவினர் ரகசியமாக வந்து சென்றுள்ளனர். எங்களுக்கு முன்கூட்டியே சொல்லி இருந்தால் நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருப்போம். ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி, மந்திரி, சபாநாயகர், துணை சபாநாயகர் இன்னொரு மாநிலத்திற்கு செல்லும்போது முறைப்படி முன்கூட்டியே அந்த மாநிலத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பிரச்சினை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

நான் கண்டிக்கிறேன்


கர்நாடகத்திற்குள் கள்ளத்தனமாக வந்து சென்றுள்ள கோவாவினர், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களின் இந்த செயலை நான் கண்டிக்கிறேன். நாங்கள் சட்டத்தை மீறி எந்த வளர்ச்சி பணியையும் கனகும்பியில் செய்யவில்லை. அரசியல் சாசனம், சட்டத்தை கர்நாடகம் எப்போதும் மதித்து நடந்து வருகிறது.

மதவாத கும்பலை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். அத்தகைய நபரைத்தான் மதவாதிகள் ஆதரிக்கிறார்கள். காந்தி அமைதி தூதுவராக இருந்தார். அவர் அனைத்து மதத்தினரையும் மதித்து நடந்தார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்