ஒரே நாளில் நடந்த 5 போராட்டங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய திருச்சி

ஒரே நாளில் நடந்த 5 போராட்டங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திருச்சி திணறியது.

Update: 2018-01-29 23:00 GMT
திருச்சி,

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று காலை தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மணல் லாரி உரிமையாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பங்கேற்க லாரி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இவர்களது ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்பாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்குள் புகுந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக டாஸ்மாக் பணியாளர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தமிழ் மாநில காங்கிரசார் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் 100 நாள் வேலைத்திட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கும்மியடித்து கோஷம் போட்டனர். தே.மு.தி.க.வினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அதே இடத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நேற்று ஒரே நாளில் நடைபெற்ற இந்த 5 போராட்டங்களால் திருச்சி நகரம் திணறியது. போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்