பஸ் கட்டண உயர்வை கண்டித்து மடத்துக்குளம், உடுமலை பகுதியில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் மறியல்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மடத்துக்குளம், உடுமலை பகுதியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-29 21:45 GMT
மடத்துக்குளம்,

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அதை முற்றிலும் திரும்பப்பெறக்கோரியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தி.மு.க.வினர் தோழமை கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை உள்பட மொத்தம் 46 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

அதன்படி, மடத்துக்குளத்தில் கோவை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 300 பேரை கைதுசெய்தனர்.

இதுபோல் உடுமலை பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு உடுமலை நகர செயலாளர் எம்.மத்தீன் முன்னிலைவகித்தார். எஸ்.ஆர். மதுசூதனன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சவுந்திரராஜன்(இந்திய கம்யூனிஸ்டு), ரவிக்குமார்(விடுதலை சிறுத்தைகள் கட்சி), முன்னாள் நகராட்சி தலைவர் செ.வேலுச்சாமி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.ராஜலட்சுமி பழனிசாமி, தி.மு.க. நகர அவைத்தலைவர் ஆசாத், பொருளாளர் சொர்க்கம் பழனிசாமி மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியினர் என்று திரளானோர் கலந்து கொண்டனர்.

இதில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 9 பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைதுசெய்தனர். உடுமலை ஒன்றியத்தில் எஸ்.வி.புரத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் ஒரு பெண் உள்பட 108 பேரும், பொள்ளாச்சி சாலையில் முக்கோணம் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் 42 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்