6 மாதத்துக்குள் மூடுவதற்கு உத்தரவிட்ட நிலையில் புதிதாக மணல் குவாரி திறப்பதால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை

தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூடவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மணல் குவாரிகளை திறப்பது சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

Update: 2018-01-29 21:30 GMT
விருதுநகர்

தமிழகம் முழுவதும் 6 மாதங்களில் மணல் குவாரிகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனைத்தொடர்ந்து 6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே திருச்சுழி அருகே முத்துராமலிங்கம்புதூர், சாத்தூர் அருகே நென்மேனி ஆகிய இடங்களில் குண்டாறு மற்றும் வைப்பாற்று படுகைகளில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுவிட்டன. தற்போது காரியாபட்டி அருகே பிசின்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அந்த குவாரியை மூட உத்தரவிடுமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுப்பதோடு, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சுழி அருகே சேதுபுரத்தில் குண்டாற்று படுகையில் புதிதாக மணல் குவாரி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மணல் குவாரி செயல்படுவதற்கு சேதுபுரம், செல்லையாபுரம், இலுப்பைகுளம், காத்தான்பட்டி, வேளானூரணி ஆகிய கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் அள்ள வந்த வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டன. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லாத நிலையில் திறந்த உடனேயே மணல் குவாரியை செயல்படுத்த முடியாமல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோ£ட்டு மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ள நிலையில் வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மணல் குவாரிகளை திறக்க அனுமதிப்பதால் கிராமப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதுடன், சட்டம்–ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தேவையற்ற சட்டம்–ஒழங்கு பிரச்சினைகளை தவிர்க்க புதிதாக மணல் குவாரிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அப்பகுதி கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தமிழக அரசு மணல் குவாரிகளை செயல்படுத்த முடியாத நிலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணலை வினியோகிக்க இறக்குமதி மணல் மற்றும் பிரம்மபுத்திரா மணலை வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எம்–சாண்ட் மணல் உற்பத்தியையும் ஊக்குவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்