பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 29 இடங்களில் சாலை மறியல், 1,659 பேர் கைது

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் 29 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-29 21:45 GMT
சிவகங்கை,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு நகர தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், சூரி ராமநாதன், காங்கிரஸ் நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், ராஜரத்தினம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், நகர செயலாளர் சுந்தரபாண்டியன், மாணவரணி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராஜேஷ், சந்திரன் உள்பட பலர் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ஆகியோர் கைதுசெய்தனர். இதேபோல் சிவகங்கை–மானாமதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், காங்கிரஸ் வட்டார தலைவர் சோனைமுத்து உள்பட 108 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி பெரியார் சிலை அருகே முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் சொக்கு, தொழிற்சங்க நிர்வாகி மலையரசன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சீனிவாசன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜிகாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் தட்சிணாமூர்த்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் சிற்பி சேதுதியாகராஜன், மனோகரன், வேங்கைமூர்த்தி, காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி மெய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேரை காரைக்குடி போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் சாக்கோட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையிலும், பள்ளத்தூரில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதகுபட்டியில் பஸ்நிலையம் அருகில் சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொதுகுழு உறுப்பினர் முத்து, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோனை, வட்டார தலைவர் வேலாயுதம் உள்பட 90 பேரை மதகுபட்டி போலீசார் கைதுசெய்தனர்.

எஸ்.புதூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் வைத்தியநாதன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சிங்காரம், மாவட்ட குழு உறுப்பினர் சேதுராமன், எஸ்.புதூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்காரம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மறியலில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரையில் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் மாரிமுத்து, ராமகிருஷ்ணன், ராஜகம்பீரம் அவைத்தலைவர் சேக்முகமது, பொருளாளர் ராஜாங்கம், காங்கிரஸ் ஆரோக்கியதாஸ் உள்பட 93 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கிழக்கு மற்றும் நகர தி.மு.க. சார்பில் காந்திசிலை அருகில் சாலை மறியல் செய்த ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் பொண்ணுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துசாமி, குமரேகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், மருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கம்புணரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.அருணகிரி தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் யாகூப் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர். பின்னர் பஸ் நிலையம் அருகில் காரைக்குடி–திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை சிங்கம்புணரி போலீசார் கைதுசெய்தனர். இதேபோன்று திருப்புவனத்தில் மணிமுத்து பிள்ளையார் கோவில் முன்பு தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்யப்பட்டனர். இளையான்குடியில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், பேரூர் செயலாளர் நஜூமுதீன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் செய்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 140 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருப்பத்தூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், பொதுககுழு உறுப்பினர் செழியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயசண்முகம், நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் நகர தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்ட இணை செயலாளர் மருதுபாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் நூர்முகமது, இந்திய கம்யூனிஸ்டு முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக ஹைதர்அலி, மனிதநேய மககள் கட்சி நகர தலைவர் சமஸ்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மறியல் செய்த 134 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை, அரளிககோட்டை, மானகிரி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 29 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 1,659 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்