ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.7 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). தாய் மஞ்சுளாவுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

Update: 2018-01-29 23:00 GMT
கல்பாக்கம்,

கார்த்திக், கடந்த 26-ந்தேதி மாலை பவுஞ்சூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் இடத்தில் ஏற்கனவே ரூ.7 ஆயிரம் இருப்பதை கண்டார். அந்த பணத்தை எடுத்த அவர், தனது பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசனிடம் கூறினார். அவர் வங்கி மேலாளர் மற்றும் அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 3 நாள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று வங்கிக்கு சென்று மேலாளர் கணேசனிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.

ஏழ்மை நிலையிலும் நேர்மையுடன் அந்த பணத்தை ஒப்படைத்த மாணவர் கார்த்திக்கை பாராட்டி அவருக்கு ரொக்க பரிசும், நினைவு பரிசும் வழங்கி வங்கி மேலாளர் பாராட்டினார். இதற்கிடையில் ஏ.டி.எம்.மில் பணம் இருந்த தகவல் ‘வாட்ஸ்அப்பில்’ பரவியது.அதை பார்த்த பாலூரைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் முருகவேல்(59) அது தனது பணம்தான் என்று வங்கி மேலாளரை அணுகினார். கடந்த 26-ந்தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை செருகி பணம் எடுக்கும்போது மின்சாரம் தடைபட்டதால் பணம் வரவில்லை. தொடர் விடுமுறை என்பதால் வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றார். அவரிடம் நடந்த விவரங்களை எழுதி கொடுத்தால் உரிய விசாரணைக்கு பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்