அன்பு, தியானம் மூலம் பூரண மகிழ்ச்சியை உணரலாம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேச்சு

அன்பு, தியானம் மூலம் பூரண மகிழ்ச்சியை உணரலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

Update: 2018-01-29 22:15 GMT
ஊட்டி,

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் 80-வது ஆண்டு விழா, ‘அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறை ஞானம்‘ என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் பீனா தலைமை தாங்கினார். விழாவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த அரங்கில் நுழைந்தவுடன், அமைதியான தியானத்தின் அதிர்வு தெரிகிறது. இது மிகப்பெரிய சான்று. அரங்கத்தில் அமைதி, அன்பு கொண்ட ஆன்மிகம் உள்ளது. நாம் பிறந்தது முதல் பணம், பதவி என ஏதோ ஒன்றை தேடி கொண்டு இருக்கிறோம். கண்டிப்பாக இதில் மகிழ்ச்சி இல்லை. அன்பு, தியானம் போன்றவற்றின் மூலம் பூரணமான மகிழ்ச்சியை உணர முடியும். இந்த இயக்கம் மக்கள் இடையே நல்ல தேடல் எண்ணத்தை உருவாக்கி வருகிறது. அதன் மூலம் கோபமின்மை, அன்பு, இனிமை போன்றவற்றை உருவாக்குவதால், மற்றவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில பொறுப்பாளர் பீனா பேசியதாவது:-

80-வது ஆண்டு விழாவையொட்டி, ஊட்டியில் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஆன்மிக நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள இயக்க மையங்களின் மூலம் மக்களுக்கு ஆன்மிகம் குறித்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தினமும் காலையில் 10 லட்சம் குடும்பத்தினர் அமைதிக்காக தியானம் செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் நமது வீட்டில் உள்ள தொலைதொடர்பு சாதனங்களை சார்ஜ் செய்யாவிட்டால், நம் மனதில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், நமது ஆத்மாவை தியானம் மற்றும் அன்பு மூலம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் 80 சதவீத மக்களில் 20 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் உள்ளனர். மன அழுத்தத்தை போக்க பிரம்ம குமாரிகள் இயக்க மையத்தில் தியானம் செய்ய கற்றுக்கொண்டு, கடைப்பிடிப்பதன் மூலம் மனஅழுத்தத்தை குறைக்க முடியும். நல்ல ஆரோக்கியம், மன மகிழ்ச்சி போன்றவற்றிற்கு மனக்கட்டுப்பாடு, தியானம் முக்கியம். நாம் வாழும் இடத்திலேயே சொர்க்கத்தை காண முடியும். இதை காண மனதை ஒருமைப்படுத்தி தியானத்தை கடைப்பிடித்து அன்பை செலுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் சொர்க்கத்தை காணலாம். தமிழகத்தில் கடந்த 48 ஆண்டுகளாக இயக்கம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 33 ஆண்டுகளாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஆன்மிகத்தை வலியுறுத்தி பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் கொடிகளை மேடையில் இருந்தவர்கள் அசைத்தனர். முன்னதாக 80-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பெண்கள் 80 பூரண கும்பங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்துக்கு வந்தனர். தொடர்ந்து மையத்தில் மாநாடு நடந்தது.

விழாவில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, முன்னாள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுந்தரதேவன், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்வரி, டாக்டர்.பக்தவச்சலம், இஸ்ரோ விஞ்ஞானி மூர்த்தி, போஜராஜ் மற்றும் பிரம்மா குமாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்