வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2018-01-29 22:30 GMT
காரைக்கால்,

காரைக்கால் தலத்தெருவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

அப்போது களப்பணிக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டிருந்த 2 கிராம விரிவாக்க பணியாளர்களை அவர்களது செல்போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? எந்த விவசாயியின் வயலில் உள்ளார்கள்? என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து பூச்சிநோய் கண்காணிப்பு பிரிவில் வாரந்தோறும் விவசாயிகளின் வயல்களில் ஆய்வு செய்த அறிக்கையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரைக்கால் தலத்தெரு பகுதியை சேர்ந்த 44 விவசாயிகள் விடுபட்டுள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அமைச்சர் கேட்டார். அதுதொடர்பாக வேளாண்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை கேட்டுக் கொண்ட அமைச்சர், இதுதொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து தனக்கு குறிப்பு அனுப்பி வைக்கும்படி தெரிவித்தார். புதுச்சேரியில் இயற்கை வேளாண்மைக்கு ஒரு கிராமமே மாறி விட்டது. காரைக்காலில் அது போன்று என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளித்து கூறும்போது, காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர், சேத்தூர் மற்றும் நல்லெழுந்தூர் கிராமங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, கோட்டுச்சேரி பகுதியில் இயற்கை முறையில் மாம்பழங்களை உற்பத்தி செய்து காரைக்கால் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து காரைக்காலில் மலர்க்கண்காட்சி நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார். அப்போது காரைக்காலில் பிப்ரவரி 16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் மலர்க்கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி வேளாண் துறை செயலரிடம் இருந்து அனுமதி வர வேண்டும். இன்னும் 2 நாட்களில் அனுமதி கிடைத்து விடும். அதன் பிறகு மேற்கொண்டு அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக துணை இயக்குனர் கணேசன், வேளாண் அலுவலர் ஜெயந்தி ஆகியோர் மலர் கண்காட்சியில் இடம்பெறும் மலர்களை வாங்குவது சம்பந்தமாக பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு சென்று அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆர்.கேசவன், கூடுதல் இயக்குனர் க.மதியழகன், இணை இயக்குனர் முகம்மதுதாசீர், துணை இயக்குனர்கள் கணேசன், அருணன் மற்றும் வேளாண் அலுவலர்களும், அலுவலக கண்காணிப்பாளரும் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்