அனைத்து தரப்பினருக்கும் பா.ஜ.க.வில் தான் வாய்ப்பு தரப்படுகிறது

அனைத்து தரப்பினருக்கும் பா.ஜ.க.வில் தான் வாய்ப்பு தரப்படுகிறது என்று பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.

Update: 2018-01-28 23:09 GMT
புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த தொழிலதிபர் முருகசாமி மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். இந்த விழாவில் மாநில தலைவர் சாமிநாதன் பேசியதாவது:-

நாட்டின் முன்னேற்றத்துக்கு பாரதீய ஜனதாதான் உழைக்கிறது. அதனால்தான் மக்கள் விரும்பி வந்து பாரதீய ஜனதா கட்சியில் இணைகின்றனர். தொழிலதிபர் முருகசாமி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான எம்.என்.ஆர்.பாலனின் சொந்த அண்ணன்.

இன்னும் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளனர். நமக்கு எல்லா தொகுதியிலும் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் தேய்ந்து வருகிறது.

இதற்கு காங்கிரசார் அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்காததுதான் காரணம். ஆனால் பாரதீய ஜனதாவில் அனைத்து தரப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் காங்கிரசில் அந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னரைப்பற்றி ஏதேதோ பேசி வந்தார். கடைசியில் அவர் கவர்னர் கிரண்பெடியிடம் சரணாகதி அடைந்துவிட்டார். அவர் கவர்னர் அளித்த விருந்தில் சிரித்து பேசியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு சாமிநாதன் பேசினார்.

விழாவில் பொருளாளர் சங்கர், விவேகானந்தா பள்ளி தாளாளர் செல்வகணபதி, பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், துணைத்தலைவர்கள் சோமசுந்தரம், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்