சென்னை புறநகர் பகுதியில் ரெயிலில் அடிபட்டு 3 பெண்கள் பலி

சென்னை புறநகர் பகுதியில் ஒரே நாளில் ரெயிலில் அடிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-01-28 22:45 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலாஜி நகர், நர்மதா தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி அலமேலு(வயது 75). இவர், நேற்று மதியம் தாம்பரம்-பெருங்களத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இரும்புலியூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் குரோம்பேட்டை ராதா நகர், ராஜாஜி தெருவைச்சேர்ந்தவர் நமச்சிவாயம். இவருடைய மகள் அபிராமி(39). இவர், நேற்று மதியம் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற விரைவு ரெயில் மோதி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற இளம்பெண் ஒருவர் மீது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பலியான பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவருக்கு 25 வயது இருக்கும். மெருன் மற்றும் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து இருந்தார்.

தாம்பரம் ரெயில்வே போலீசார் பலியான 3 பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்