பெரம்பலூர் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 631 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 46 ஆயிரத்து 631 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டுமருந்து வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-01-28 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளம் பிள்ளைவாத தடுப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி முதல் கட்டமாக நேற்று நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தா, ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த முகாம்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 387 மையங்களில் 46 ஆயிரத்து 631-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 602 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 2-வது கட்டமாக 11.3.2018 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சம்பத், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மங்களமேடு அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் யுனானி பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட உரிய ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்