அ.தி.மு.க.வினர், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே சுவர் விளம்பரம் எழுதுவதில் பிரச்சினை

அ.தி.மு.க.வினர், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கிடையே சுவர் விளம்பரம் எழுதுவதில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-28 23:00 GMT
கரூர்,

கரூரில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பொதுக்கூட்டம் நடத்த இதுவரை நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையில் பொதுக்கூட்டத்தையொட்டி கரூரில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் எழுதும் பணியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் சுவர் விளம்பரம் எழுதிய பெயிண்டரை போலீசார் தாக்கியதாக கூறி செந்தில்பாலாஜி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர் உள்பட 70 பேர் கைதாகி விடுதலையாகினர்.

இந்த நிலையில் கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா அருகே தடுப்பு சுவரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நேற்று சுவர் விளம்பரம் எழுதினர். அந்த சுவரின் இன்னொரு பகுதியிலும் எழுத முயன்றனர். அந்த சுவரில் விளம்பரம் எழுத அ.தி.மு.க. ஏற்கனவே முன்கூட்டியே இடம்பிடித்து குறியீடு போட்டிருப்பதாகவும், அதில் எழுத கூடாது என அப்பகுதி அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் சுவர் விளம்பரம் எழுதப்படும் என டி.டி.வி.தினகரன் தரப்பினர் கூறினர்.

இது குறித்து அப்பகுதி அ.தி.மு.க.வினர் மாவட்ட கழகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நகர செயலாளர் நெடுஞ்செழியன், கீதா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திருமாநிலையூரில் திரண்டு வந்தனர். இதேபோல டி.டி.வி.தினகரன் ஆதர வாளர்கள் கோல்டு ஸ்பாட் ராஜா, தியாகு உள்பட பலரும் அங்கு திரண்டனர். இரு தரப்பினரும் எதிர் எதிர் திசையில் நின்று கொண்டிருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதற்கிடையில் இரு தரப்பினரும் திரண்டு இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தடுப்பு சுவரில் ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரம் எழுத தாங்கள் இடம்பிடித்திருப்பதால் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் எழுத அனுமதிக்க கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க. பிரமுகர்கள் தெரிவித்தனர்.

அதேபோல சுவரில் எழுத தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினரையும் கலைந்து செல்லும்படியும், சுவர் விளம்பரம் எதுவும் தற்போது எழுத வேண்டாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கூறினார்.

சுவர் விளம்பரம் எழுதுவதில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் கலெக்டர் தலைமையில் ஒரு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சுவர் விளம்பர பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தெரிவித்தார். அதன்பின்பும் இரு தரப்பினரும் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே திரண்டு நின்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இரு தரப்பினரும் திரண்டு நின்ற சம்பவத்தால் திருமாநிலையூர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்