தமிழத்தில் பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் கடும் பாதிப்பு

தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

Update: 2018-01-28 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில், சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜாண்அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அபிராமி நாதன், சீனிவாசன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் பாலகுருசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தீர்மானக்குழு இணை செயலாளர் கடலாடி சத்திய மூர்த்தி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசும் போது, ‘தமிழகம் முன்னேற காரணமாக இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. தி.மு.க. ஒரு கொள்கைக்காக இயங்குகிறது. தமிழ் மொழிக்கு பெருமை தேடி தந்தவர் கருணாநிதி. இப்போது உள்ள ஆட்சியாளர்கள், தங்களுக்காக பணத்தை சேர்த்து வருகிறார்கள். அரசு கஜானா காலியாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வீட்டு கஜானா நிரம்பி வருகின்றன.

மாவட்ட, மாநகர நிர்வாகம் மக்களின் நிலையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் வரி, வாடகை என அனைத்தையும் உயர்த்தி ஏழை மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இஷ்டத்துக்கு செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. தினமும் கொலை நடக்கிறது. பஸ் கட்டண உயர்வு காரணத்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநில பேச்சாளர் கோவிந்தன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவர் அணி மாநகர அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்