பெண்மை சொல்லும் வலிமை

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் என்ற சிறப்பை பெற்றவர் சீமா ராவ். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

Update: 2018-01-28 07:25 GMT
ந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் என்ற சிறப்பை பெற்றவர் சீமா ராவ். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். கமாண்டோ பயிற்சியாளராக மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளுக்கும், சாகசங்களுக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். புருஸ்லீ உருவாக்கிய `ஜீத் குணே டோ' எனும் தற்காப்பு கலையை கற்று தேர்ந்த வெகு சிலருள் ஒருவராகவும், கராத்தேயில் 7-வது டிகிரி கருப்பு பட்டை வாங்கியவராகவும் விளங்குகிறார். துப்பாக்கி சுடுதல், மலையேற்றம் செய்வதில் வல்லவராகவும் விளங்குகிறார். மாடலிங் மீது ஆர்வம் கொண்ட சீமா, மிஸ் இந்தியா அழகிப்போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார். ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் அசத்துகிறார். பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சீமா, சாதிக்க துடிக்கும் பெண் களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய தந்தை ராமகாந்த் சினாரி சுதந்திரப் போராட்ட வீரர். சிறுவயதில் தந்தையின் சுதந்திர போராட்ட அனுபவ கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறார். அதுவே தந்தையைபோல நாட்டுக்காக உழைக்கும் உத்வேகத்தை கொடுத்ததாக கூறுகிறார்.

‘‘சிறுவயதில் என்னுடைய தந்தை நிறைய கதைகள் சொல்வார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அவர் சந்தித்த துயரங்களையும் விளக்கி கூறுவார். ஒருமுறை சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயிலில் இருந்து சக நண்பர்களுடன் ஆற்றில் குதித்து நீந்தி உயிர் தப்பிய சம்பவத்தையும், ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளையும் கூறினார். அதை கேட்டதும் எனக்கு நாட்டுக்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளராக வேண்டும் என்று நான் திட்டமிட்டு செயல்படவில்லை. என் தகுதியையும், திறமையையும் வளர்த்து கொண்டே இருந்தேன். என்னுடைய கடின பயிற்சி பெருமிதமிக்க பதவியை தேடிக்கொடுத்திருக்கிறது. நான் ஒருபோதும் பயிற்சியாளர் பதவி ஆண்களுக்குரியது என்று எண்ணியதில்லை. என்னை பொறுத்தவரை ஆண்களும், பெண்களும் உடல் அளவிலும், மனதளவிலும் சம வலிமை பெற்றவர்கள்தான். மனநிலைதான் வேறுபடுத்தி காட்டுகிறது. அதில் இருந்து பெண்கள் மீண்டுவர வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். எதிர்த்து போராட மனவலிமைதான் முதன்மையான ஆயுதம்’’ என்கிறார்.

சீமா ராவ், பல்வேறு விபத்துகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார். ஒருமுறை தீவிரவாதிகள் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

‘‘பயிற்சியின்போது ஏராளமான காயங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டிருக் கிறேன். ஒருமுறை தவறி விழுந்து மண்டையில் அடிபட்டு நான்கு மாதங்கள் படுக்கையில் இருந்தேன். ஒருமுறை பலத்த காயமடைந்து ஒரு மாதம் சுயநினைவில்லாமல் இருந்தேன். நான் கற்றிருக்கும் தற்காப்பு கலைகளோ, சாகசங்களோ கமாண்டோ பயிற்சிக்கு போதுமானதல்ல என்பதை உணர்ந்தேன். அனைத்து வகையான தட்ப வெப்ப நிலைகளையும் தாக்குப்பிடிக்க உடலையும், மனதையும் வலுப்படுத்த வேண்டியிருந்தது. குளிர் பிரதேசங்களில் தாக்குப்பிடிப்பதற்காக மலையேற்றம் மேற்கொள்ள பழகினேன். நீருக்கடியில் மூச்சுப்பயிற்சி செய்து உடலை வலுப்படுத்த ஸ்பா டைவிங் கற்றுக்கொண்டேன். எத்தகைய பயிற்சிகள் பெற்றாலும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்’’என்பவர், பெண்கள் சுய பாதுகாப்பை வலுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக் கிறார்.

‘‘சுய பாதுகாப்பு குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு மட்டும் இருந்தால் போதாது. தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டப்பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். தினமும் பெண்கள் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் தூரமாவது ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே எத்தகைய அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுக்கும். நான் என்னுடைய உடற்பயிற்சியில் ஓட்டப்பயிற்சியை கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியும், தற்காப்பு கலை பயிற்சியும் மேற்கொள்கிறேன். என்னுடைய பணிக்கு உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்