ஐந்து அதிசயங்கள்

ரசீனா ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த ஐந்து பிள்ளைகளும் 18 வயதை தொட்டிருக்கிறார்கள்.

Update: 2018-01-28 07:20 GMT
சீனா ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த ஐந்து பிள்ளைகளும் 18 வயதை தொட்டிருக்கிறார்கள். தாயாரோ, தந்தை நசாருதீனோ, ‘டேய்..’ என்று குரல் கொடுத்தால், ஐந்து பேரும் ‘என்ன.. சொல்லுங்க?’ என்று பதில் குரல் கொடுக்கிறார்கள். அவர்களில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். இவர்கள் எட்டு நிமிட இடைவெளியில் பிறந்த சகோதர, சகோதரிகள். அதனால் உலகத்தின் அபூர்வ பிரசவத்தில் பிறந்த பிள்ளைகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள். ‘கடவுளிடம் நாங்கள் ஒரு பூவைதான் கேட்டோம். கடவுள் எங்களுக்கு ஒரு பூந்தோட்டத்தையே கொடுத்துவிட்டார். இப்போது அவர்களுக்கு 18 வயதாகிவிட்டது. இது கடவுளின் கருணைதான்..’ என்று சிலிர்க்கிறார்கள் தாயும், தந்தையும்.

இந்த அபூர்வ குடும்பத்தினர் கேரள மாநிலம் கருநாகப்பள்ளி அருகேயுள்ள ஆதிநாடு என்ற பகுதியில் வசித்து வருகிறார்கள். நசாருதீன்- ரசீனா தம்பதி களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. அதனால் பிரார்த்தனையோடு, சிகிச்சையையும் தொடர்ந்தார்கள். தொடக்கத்தில் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மனந்தளரவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

“சிகிச்சை பெற்று ஆறு வருடங்கள் ஆன நிலையில் டாக்டர் என்னிடம் வந்து, ‘உங்கள் மனைவி கர்ப்பிணியாகிவிட்டார். குழந்தைகள் ஒன்றல்ல.. இரண்டல்ல.. நான்கு அவர் வயிற்றில் இருக்கின்றன’ என்றார். அதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதற்கு பதில், பயம் உருவானது. இத்தனை குழந்தைகள் உங்கள் மனைவியின் வயிற்றில் இருப்பதை இப்போதே அவரிடம் சொல்ல வேண்டாம். தாமதமாக சொல்லிக்கொள்ளலாம் என்று எனக்கு ஆலோசனை சொன்னார். நானும் அமைதியாக இருந்துவிட்டேன். பிரசவம் நெருங்கும்போது தனக்கு இரட்டையர்கள் பிறப்பார்கள் என்று ரசீனா தானாகவே யூகித்துக்கொண்டார்.

பிரசவ அறையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நான்கு குழந்தைகள் வரிசையாக பிறந்ததும், ரசீனா தன் வயிற்றில் இன்னொரு குழந்தை இருப்பதுபோல் சந்தேகத்தோடு சொன்னார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஐந்தாவது குழந்தை பிறந்தது. அதன் எடை 750 கிராம்தான் இருந்தது. உறவினர்கள் அனைவரும் வரிசையாக நின்று பிறந்த குழந்தைகளை ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டிருந்தார்கள்” என்று கணவர் சொல்லும்போது, பிரசவ அறையில் 18 வருடங்களுக்கு முன்பு இருந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி ரசீனாவின் முகத்தில் மீண்டும் தென் படுகிறது. குழந்தைகளின் பெயர்: சுபீனா, ஷப்னா, சுமைய்யா, அமீர், முகமது ஆதில்.

ஐந்தாவது பிறந்த அபூர்வ குழந்தை பெயர் ஷப்னா. இவரைத்தான் ரொம்ப சிரமப்பட்டு வளர்த்தெடுத்திருக்கிறார்கள். எடை மிகவும் குறைவாக இருந்ததால் அவளை டாக்டர்கள் ‘சின்னு’ என்று செல்லமாக அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இரட்டைக் குழந்தைகள் என்றால், ஒன்று அழும்போது இன்னொன்றும் உடனே அழத் தொடங்கிவிடும். அதுபோல்தான் ஐந்தும் அவ்வப்போது அழுது கூச்சல் போட்டிருக்கிறது. அது மட்டுமின்றி ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், அடுத்த குழந்தைக்கும் அது தொற்றியிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு குழந்தைக்கு வாங்கும் மருந்தை எல்லா குழந்தை களுக்கும் வழங்க முடிந்திருக்கிறது.

இந்த அபூர்வ குழந்தைகளில் முதலில் பிறந்த அமீர், “எல்லா வருடமும் எங்களை பற்றிய செய்தி பத்திரிகைகளில் வந்துவிடும். ஒன்றாம் வகுப்பில் இருந்து பிளஸ்-டூ வரை அந்த நிலை நீடித்தது. நாங்கள் மூன்று பள்ளிகளில் படித்தோம். எந்த பள்ளியில் படித்தாலும் ஐவரும் ஒன்றாக அங்கு போவோம். பிளஸ்-டூ வரை ஒரே பெஞ்சில் இருந்தே படித்தோம். பிளஸ்- ஒன் படிக்கும்போது நாங்கள் பிரியும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாங்கள் ஒன்றாகவே படிக்க விரும்பினோம். உடனே அந்த தகவல் அப்போதைய கல்வி மந்திரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதியோடு நாங்கள் ஒரே வகுப்பில் படித்தோம்”என்றார்.

சகோதரிகள் மூவரும் ஆசிரியையாக ஆசைப்பட்டு, அதற்கான பயிற்சி நிறுவனத்தில் சேர, சகோதரர்கள் இருவரும் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்திருக் கிறார்கள்.

“எங்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்ததால் எங்களைப் போல் நிறைய பேர் சந்தோஷப்பட்டார்கள். எங்கள் குழந்தைகளை ஏராளமானவர்கள் வந்து பார்த்து விட்டு சென்றார்கள். அவர்களில் பலர் எங்களுக்கு அறிமுகமில்லாதவர்கள். வேலூரில் உள்ள சுப்பிர மணிய சுவாமி என்பவர் குழந்தைகளை பார்க்க அடிக்கடி வருவார். இப்போது குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பித்தருவார். என் கணவர் பல வருடங்களாக வளைகுடா நாட்டில் தொழில் செய்துகொண்டிருக்கிறார். இப்போது அங்கு முன்புபோல் தொழில் இல்லை. விரைவில் இங்கே திரும்பி வந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

முன்பெல்லாம் ஐந்து பேரும் அடிக்கடி வீட்டில் ஒன்று சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருப்பார்கள். இப்போது லீவு நாட்களில்தான் ஒன்று கூடு கிறார்கள். பிள்ளைகள் ஐந்தாக இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான் என்பது போல் அவர்களுக்குள் நெருக்கமான அன்பு இருக்கிறது. மகள்கள் மூவரும் ஒரே மாதிரியான முடிவைத்தான் எடுக்கிறார்கள். ஒரு குழந்தையை பெற்று வளர்க்கவே பெற்றோர் கஷ்டப் படுகிறார்கள். ஐந்து பேரை வளர்த்து ஆளாக்குவது என்பது ரொம்ப கஷ்டம்தான். அதுவும் ஒரே வயதினர். இவர்களை வளர்க்க உறவினர்கள் எல்லாம் எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு குழந்தையையும் வளர்த்து தந்திருக் கிறார்கள்” என்று நெகிழ்ச்சியாக சொல் கிறார், ரசீனா.

ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாய்மார்களில் சிலரே, பிரசவ வலிக்கு பயந்து சிசேரியனை தேடும்போது ஐந்து பிள்ளைகளை சுக பிரசவத்தில் பெற்ற உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? என்று ரசீனாவிடம் கேட்டபோது..

“உண்மையில் பிரசவம் எனக்கு எந்த கஷ்டத்தையும் தரவில்லை. எனக்கு தெரியாமலே பிரசவம் நடந்துவிட்டது என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். இரவு பிரசவ அறைக்கு சென்றேன். இறைவன் அருளால் எல்லா குழந்தைகளும் நலமாக பிறந்தன. ஐந்தாவது பிரசவம் முடிந்ததும் டாக்டர், நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்றேன். உடனே டாக்டர்கள் சிரித்துவிட்டார்கள்” என்று, ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றுவளர்க்கும் பெரு மிதத்தோடு சொல்கிறார், ரசீனா.

மேலும் செய்திகள்