திருப்பூரில் குடிபோதையில் 2 ஷேர் ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு

திருப்பூரில், 2 ஷேர் ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-28 00:18 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மங்கலம் ரோட்டில் ஆட்டோக்கள் நிறுத்தம் உள்ளது. நேற்று அந்த நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. மாலை 3 மணி அளவில் வாலிபர் ஒருவர் அந்த ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவர் அங்கு நிறுத்தி வைத்திருந்த ஒரு ஷேர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார். மேலும் மற்றொரு ஷேர் ஆட்டோவின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கண்ணாடியை செங்கலால் அவர் அடித்து நொறுக்கினார். இதை கவனித்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்ட 2 ஷேர் ஆட்டோக்களும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுதொடர்பாக ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ்(வயது50), முருகன்(51) ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஜம்மனை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (27) என்பதும், சுமை தூக்கும் தொழிலாளியான அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, போதையில் 2 ஷேர் ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. ஆனந்தராஜின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்