பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில், பஸ் கட்டண உயர்வினை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-27 23:00 GMT
அரியலூர்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், பஸ் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், அரியலூர் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே நேற்று காலை தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கி, பஸ் கட்டண உயர்வினால் பொதுமக்கள், ஏழை மாணவ-மாணவிகள், குறைந்த மாத சம்பளத்திற்கு வேலைபார்ப்போர் உள்ளிட்டோர் படும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் 20 ஆயிரத்திற்கும் மேல் அரசு பஸ்களை வைத்து கொண்டு போக்குவரத்து கழகத்தை நஷ்ட மடைய செய்திருப்பது தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வருவாயை பெருக்க பல வழிகள் இருக்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏன் வஞ்சிக் கிறீர்கள்? என தி.மு.க.வினர் கேள்வி எழுப்பி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாக்கள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வீண் செலவு செய்வதை அரசு நிறுத்த வேண்டும். மக்களை பற்றி சிந்திக்காமல் தமிழக அமைச்சர்கள் ஆணவமாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், எம்.ஜி.ஆர்.கழக மாவட்ட செயலாளர் கலைவாணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சவுகத்அலி, விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அங்கு மாவட்ட போலீஸ்துறை சார்பில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்