வாலிபருக்கு அரிவாள் வெட்டு: போலீசாரை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் அருகே வாலிபருக்கு அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-27 22:15 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவருடைய மனைவி சாலம்மாள் (வயது 65). இவர்களுக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தென்னை மரங்களை வைத்து விவசாயம் பார்த்து வருகின்றனர்.

அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 3 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு கட்டாயப்படுத்தி, அடியாட்களை வைத்து தனது பெயருக்கு எழுதி தரும்படி மிரட்டி வருவதோடு மட்டுமில்லாமல், தென்னந்தோப்பில் தேங்காய்களையும் வெட்டி சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாலம்மாள் உமராபாத் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரிவாள் வெட்டு

இந்தநிலையில் சம்பவத்தன்று சாலம்மாள் மற்றும் அவரது மகன்கள் தென்னந்தோப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கார்த்திக் தனது அடியாட்களுடன் வந்து சாலம்மாளை தாக்கியும், அவரது மகன் புஷ்பராஜை (30) அரிவாளால் வெட்டிவிட்டு தென்னைமரத்தில் தேங்காய்களையும் பறித்து விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலம்மாளின் உறவினர்கள் நேற்று ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு கூடி உமராபாத் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் கார்த்திக் மற்றும் அவரது அடியாட்களை கைது செய்யக்கோரியும், நடவடிக்கை எடுக்காத உமராபாத் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பினர். 

மேலும் செய்திகள்