வேலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

வேலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ராமன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2018-01-26 23:27 GMT
வேலூர்,

இந்திய குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூரில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கொடியேற்றி வைப்பதற்காக பங்களாவில் இருந்து புறப்பட்ட கலெக்டர் ராமன், கோட்டை முன்புள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு வந்த அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து 8 மணிக்கு கலெக்டர் ராமன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் போலீஸ் சூப்பிரண்டு பகலவனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.

பின்னர் விழாப்பந்தலில் சுதந்திர போராட்ட தியாகிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி கவுரவித்தார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த 35 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கத்தை அணிவித்தார். 11 சிறந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றுகளையும் கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ ஆகிய துறைகளின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

அதன் பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வேலப்பாடி வி.கே.வி.எம். மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சன்பீம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்ட கம்பு விளையாட்டு மற்றும் இதர ஆயுத விளையாட்டு கழக மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, சிறைத்துறை டி.ஐ.ஜி. பாஸ்கரன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் பாலாஜி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கமிஷனர் விஜயக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் கண்ணன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

குடியரசுதின விழாவுக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை அழைக்கவில்லை. ஆனாலும் அவர் மாநகராட்சியில் நடந்த குடியரசுதின விழாவுக்கு சென்று, ‘முன்னாள் மேயர், இந்த தொகுதி எம்.எல்.ஏ. வாக இருக்கும் என்னை ஏன் அழைக்கவில்லை’ என்று கேட்டு அதிகாரிகளை அவர் கண்டித்தார். 

மேலும் செய்திகள்