தி.மு.க.வினர் இடையே திடீர் கோஷ்டி மோதல்

திருச்சியில் தி.மு.க.வினர் திடீர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகளை வீசி, ஒலி பெருக்கிகளை அடித்து நொறுக்கியதால் பர பரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-26 22:30 GMT
திருச்சி,

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.வின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராமஜெயம் பெயரில் அவருடைய ஆதரவாளர்கள் அறக்கட்டளை வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். நேற்று காலை எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ராமஜெயம் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அதேபகுதியில் உள்ள தி.மு.க.வை சேர்ந்த பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி, ஒலி பெருக்கிகளையும் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இந்த சம்பவம் நடந்ததும், விழாவுக்கு ஒரு தரப்பினரை அழைக்காத ஆத்திரத்தில் மற்றொரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த கே.என்.நேரு, இந்த மோதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.

இதற்கிடையே பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கண்ணன், எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “தி.மு.க.வை சேர்ந்த ஒரு கோஷ்டியினர் தனது கட்டிடம் முன்பு நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்டு இருந்த செடிகளை சேதப்படுத்தியதாகவும், இதனை தட்டி கேட்ட தன்னை மிரட்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தி.மு.க.வை சேர்ந்த பாஸ்கர் அளித்த புகாரில், விழா நடைபெற இருந்தபோது ஒரு தரப்பினர் உள்ளே புகுந்து நாற்காலிகள், ஒலி பெருக்கிகளை அடித்து நொறுக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்